என் வீட்டு சுட்டிப் பயல் ஒரு இயற்கை விரும்பி. என் வீட்டுத் தோட்டத்தில் உள்ள பூச்சிகளுக்கும் அவனைப் பிடிக்கும். குறிப்பாக அவனை முத்தமிடுவது அவைகளுக்கு பிடித்தமான செயல்களில் ஒன்று. கஷ்டம் எங்களுக்குத்தான். சுவடைப் பார்த்து – இது கொசு முத்தம், இது எறும்பு முத்தம், இது என்ன முத்தம் என்று தெரியவில்லை ஓடு மருத்துவரிடம் – என்று முத்தங்களுக்கேற்ப செயலாற்ற வேண்டும்.
நான் விதிவசத்தால் விவசாயியானவன் . வீட்டைச்சுற்றி புல்வெளி அதிகம். பெயர் தெரியாத செடிகளும் அதிகம். சில செடிகளை வாஞ்சையுடன் தடவிக் கொடுத்தால் அவை நம்மை வாட்டி எடுத்துவிடும். சில ஆண்டுகளில், இந்தச் செடிகள் போதாதென்று, என்னுள் உறங்கிக் கொண்டிருந்த விவசாயி எழுந்து ”தக்காளி போடு, கத்தரிக்காய் போடு” என்று உசுப்பேற்றி விடுவான். நானும் ஏமாந்து போய் தக்காளி பொட்டிருக்கிறேன். என் வீட்டு தக்காளியின் வாளிப்பில் மயங்கியும் போயிருக்கிறேன். எல்லொரையும் போல், “யாமறிந்த தக்காளி ரசங்களிலே, என் வீட்டு ரசம் போல் எங்கும் சுவைத்ததில்லை” என்று பீத்திக் கொண்டும் இருந்திருக்கிறேன்.
இந்த வருடம் எந்த சாகுபடியும் இல்லை. தக்காளி, கத்தரிக்காய் பாத்திகளில் ஏகப்பட்டச் பெயர் தெரியாச் செடிகள். வசந்தம் போய் வேனிற் காலம் வருவதற்குள் பாதி ஆள் (ஆறடி ஆள்) உயரத்திற்கு கிடு கிடுவென்று வளர்ந்து விட்டன. கூடவே அவற்றுடன் ஒட்டி உறவாட பெயர் தெரியாத பூச்சிகளும் பெறுகின. சுட்டிப் பயலின் முத்தங்களும் அதிகரித்தன.
மண்டிக் கிடந்த புதர்களை பார்க்க மலைப்பாக இருந்தது. வாரங்கள் உருண்டோடின. புதர்கள் சுட்டிப் பயல் உயரத்தையும் தாண்டிவிட்டன. சென்ற வாரம், ஒருவாறாக இருப்பதிலேயே பெரிய செடியை புடுங்கலாம் என்று பாத்திக்குள் நுழைந்தேன். கைகள் ஒன்றன் பின் ஒன்றாக புடுங்கின. இரண்டு மணி நேரம் போனது தெரியவில்லை. பாத்தி சுத்தமாகி விட்டது. மன நிம்மதியுடன் ஒரு நல்ல குளியல் போட்டேன். புதர்கள் உணர்த்திய பாடங்களை மனது அசை போட்டது:
- புதராவதற்கு முன்னமேயே வேண்டா விஷச் செடிகளை களைவது எளிது. நன்றாக வளர்ந்த பின் களைய அதிக உழைப்பு தேவைப்படும். (பு.ஆ: கெடுப்பது சோர்வு்)
- புதராக வளர்ந்து விட்டால் கலங்காதே. ஒரு செடியை புடுங்க ஆரம்பி, எல்லா செடியும் தானாக வந்துவிடும். (பு.ஆ: சுமையினுக்கு இளைத்திடேல்)
இயற்கை நிறைய கற்றுக்கொடுத்துக் கொண்டிருக்கிறது. கற்றுக் கொண்டேனா? பார்ப்போம்.

2 responses so far ↓
Anand // July 12, 2008 at 1:05 am |
பு.ஆ பாடங்கள் அருமை.
Chandra prabu // August 21, 2008 at 4:15 am |
Hi Friend…,
Ur style of writing is so fantastic…….Keep writing….
I loved it…. if you post anything in future, let me know.
If you have Puthia aathichoodi…in pdf format, please send to chan4k@yahoo.com
Wish you good life…
Smiles,
Chandra