”இந்த வாழ்க்கையை வைத்துக் கொண்டு என்ன செய்வது?” – இந்த கேள்வியை எல்லோரும் வாழ்க்கையில் ஒரிரு முறையாவது நம்மை நாமே கேட்டிருப்போம். நம் கேள்விகளின் வடிவங்கள் வெவ்வேறானதாக இருக்கலாம். ஆனால் உட்பொருள் ஒன்றுதான். அப்படி ஆராயப்படாத வாழ்க்கை வீண் என்கிறார் சாக்ரடீஸ் (“Unexamined life is not worth living”).
பலருக்கு இக்கேள்வியின் பதில் இவ்வாழ்க்கையில் கிட்டுவதில்லை. அதன் பயனாக காட்டாற்றில் அடித்துச் செல்லப்படும் இலையின் மேல் உள்ள எறும்பைப் போன்ற வாழ்க்கை அமைந்து விடுகிறது. சிலருக்கு இக்கேள்வியின் பதில் ஒன்றுமற்ற வெறுமையாக அமைந்து விடுகின்றது. வெறுமை பலரை பைத்தியங்களாக்குகிறது, மற்றும் சிலரை தற்கொலை செய்து கொள்ளத் தூண்டுகிறது. மிகச் சிலரே இக்கேள்வியின் பதிலை உணர்கிறார்கள். இந்த உணர்தல் சிலரை ஞானிகளாக்கியிருக்கின்றன. சித்தார்த்தன் புத்தனானதும், நரேந்திரன் விவேகானந்தனானதும், வெங்கடராமன் ரமணர் ஆனதும் இந்த உணர்தலினால்தான்.
சுப்பிரமணியன் மகாகவியானதும் இதனால்தான். அவனுக்கு தெளிவான விடை கிடைத்ததா என்று தெரியவில்லை? ஆனால் வாழ்க்கையை வைத்துக் கொண்டு என்ன செய்யக் கூடாது என்று மிகத் தெளிவாக இருந்திருக்கின்றான். அவனுடைய பதில் ஒரு கேள்வியாக அமைந்து இருக்கிறது:
தேடிச் நிதந் தின்று – பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி – மனம்
வாடித் துன்பமிக உழன்று – பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து – நரை
கூடிக் கிழப்பருவ மெய்தி – கொடுங்
கூற்றுக் கிரையெனப் பின்மாயும் – பல
வேடிக்கை மனிதரைப் போலே – நான்
வீழ்வே னென்றுநினைத் தாயோ?
சில வருடங்களுக்கு முன் என் கட்டுரையின் தலைப்பைக் கொண்ட ஒரு புத்தகத்தைப் படித்தேன். ஈர்க்கும் தலைப்பு. “என் வாழ்க்கையில் என்ன செய்வது?”, “வாழ்க்கையை எப்படி வாழ்வது?” போன்ற தலைப்புக்களை வைக்காமல் இருந்தது எனக்கு பிடித்திருந்தது. வாழ்க்கை என்பது நமக்கு அளிக்கப் பட்ட ஒரு பரிசு போலும், அந்த பரிசை வைத்துக் கொண்டு என்ன செய்வது என்று பொருள் படும்படி இருந்த தலைப்பு வித்தியாசமானதாக இருந்தது. பலர் “என் வாழ்க்கையை வைத்துக் கொண்டு என்ன செய்வது?” என்ற கேள்வியை எப்படி எதிர் கொண்டார்கள் என்பதைப் பற்றிய கட்டுரைகளை கொண்டிருந்தது அப்புத்தகம். புத்தகம் படித்து ஒரிரு ஆண்டுகள் ஆகிவிட்டமையாலும், புத்தகம் பற்றிய விமர்சனம் எழுதுவது இக்கட்டுரையின் நோக்கம் இல்லையென்பதாலும், சொல்ல வரும் கருத்திற்கு நகர்ந்து விடுகிறேன். வாய்ப்பு கிடைத்தால் புத்தகத்தை படித்துப் பாருங்கள்.
ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் வேலை பார்க்கும் கிருஷ்ணனுக்கு பயிற்சி நிமித்தமாக சுவிட்சர்லாந்து செல்லும் வாய்ப்பு கிடைக்கிறது. சுவிட்சர்லாந்து செல்வதற்கு முன் மதுரையில் இருக்கும் தன் பெற்றோரை பார்க்க வருகிறார். அங்கு சாப்பாட்டிற்கு வழியில்லாத ஒரு முதியவர், தன் மலத்தை கொட்டாங்கிச்சியில் எடுத்து உண்ணுவதைப் பார்க்கிறார். இக்காட்சி கிருஷ்ணனை, மிகுந்த மன வேதனைக்குள்ளாக்குகிறது. அப்பெரியவரைத் தடுத்து, பக்கத்திலுள்ள உணவு விடுதியில் உணவு வாங்கிக் கொடுக்கிறார். பெரியவர் வாய் திறந்து நன்றி என்று கூறவில்லை. மாறாக, கலங்கிய கண்களுடன் கிருஷ்ணனைப் பார்க்கிறார். அங்கே கிருஷ்ணன் “என் வாழ்க்கையை வைத்துக் கொண்டு என்ன செய்வது?” என்று தன்னைத் தானே கேட்டுக்கொள்கிறார். அதன் பதில் ”அக்ஷயா”.
சமீபத்தில் விஜய் தொலைக்காட்சியில் ”தமிழன் என்று சொல்லடா” என்ற நிகழ்ச்சியின் மூலம், கிருஷ்ணனைப் பற்றி தெரிந்து கொண்டேன். பெரியவர் மலம் தின்ற நிகழ்ச்சியை அவர் சொல்லும் போது, அம்மலத்திலுள்ள புழு என்மேல் ஊறுவதைப் போல் உணர்ந்தேன். தன் வாழ்க்கையின் நோக்கத்தைக் கண்டு கொண்ட கிருஷ்ணனை ஒரு ஞானி என்றே நான் உணர்கிறேன்.
கிருஷ்ணனை நான் வணங்குகிறேன்.