Wiary Of A Mad Man

Entries from September 2008

மூன்று இராமானுஜர்கள்

September 14, 2008 · Leave a Comment

‘பெயர் ராசி’யில் எனக்க்கு நம்பிக்கை இல்லை. ஆனால் இராமானுஜம் என்ற மூன்று பெரியவர்களைப் பற்றி படிக்கும் போது ‘பெயர் ராசி’ என்று ஒன்று இருக்குமோ என்று சந்தேகப் படத் தோன்றுகிறது. இதோ என்னைக் கவர்ந்த மூன்று இராமானுஜர்கள்.

மூதலாமவர், 11-12ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த வைணவப் பெரியவர். தமிழ் வளர்த்தவர். புரட்சியாளராக அறியப்பட்டவர். இவர் வாழ்க்கைக் குறிப்பில் எனக்கு பிடித்த ஒன்று – பல தடவை அலைக்கழிக்கப் பட்ட பின்,  திருக்கோஷ்டியூர் நம்பி என்பவரிடம், மந்திர உபதேசம் பெறுகிறார் இராமானுஜர். நம்பி,  “இந்த மந்திரம் பரம ரகசியம். அதிக பலன் வாய்ந்தது. மற்றவர்களுக்கு உபதேசம் செய்வதென்றால், மிகவும் ஜாக்கிரதையாக, குல கோத்திரம் அறிந்து உபதேசம் செய்” என்கிறார். இராமனுஜரோ, “இது அவ்வளவு சக்தி வாய்ந்த மந்திரம் என்றால், இதனால் எல்லோரும் பலன் அடைய வேண்டும், ஒரு சாராருக்கு மட்டும் போய்ச் சேரக் கூடாது” என்று எண்ணுகிறார். உடனே (திருக்கோஷ்டியூர்) கோவிலின் கோபுரத்தின் மேல் ஏறி, ஊரைக் கூட்டி எல்லோருக்கும் அந்த மந்திரத்தை அளிக்கிறார்.  இவரைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள வேண்டும்.

இரண்டாமவர், கணித மேதை ஸ்ரீநிவாஸ ராமனுஜன்.  20ஆம் நூற்றாண்டு ஆரம்பத்தில் வாழ்ந்தவர். முப்பத்து மூன்று வயதிற்குள் பல கணிதக் கோட்பாடுகளுக்கு பங்களித்தவர். அவர் அப்போது எழுதி  வைத்து  விட்டுப் போன நோட்டுப் புத்தகங்களை வைத்துக் கொண்டு  பல கணித வல்லுனர்கள் இப்போதும் மண்டையை உடைத்துக் கொண்டிருக்கிறார்கள்.  ராபர்ட் கனிகல் (Robert Kanigel) என்பவர் ராமனுஜத்தின் வாழ்க்கையைப் பற்றி மிக அருமையான புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார். கண்டிப்பாக படிக்க வேண்டிய வாழ்க்கை வரலாற்று புத்தகங்களில் ஒன்று.

மூன்றாமர், பேராசியர் A.K.ராமானுஜம் (1929-1993). சிகாகோ பழ்கலைக் கழகத்தில் மொழியியலாளராக பணியாற்றியவர்.  பல சங்க இலக்கிய பாடல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர். நம்மாழ்வார் பாசுரங்களை “Hymns for the drowning” என்று மொழிபெயர்திருக்கிறார்.  நாட்டுப்புற கலைகளிலும் கதைகளிலும் அதிக ஆர்வம் காட்டியிருக்கிறார்.  கர்னாடக மாநிலத்து நாட்டுப்புற கதைகள் சிலவற்றை தொகுத்து ”A Flowering Tree and Other Oral Tales from India” என்று புத்தகமாக வெளியிட்டுள்ளார். சுவையான சிறுகதைகள் அடங்கிய தொகுதி. எனக்குப் பிடித்த சிறுகதைகளில் ஒன்று:

கிராமத்துக் கோவிலில் உபன்யாசகர் சொற்பொழிவாற்றிக் கொண்டிருக்கிறார் ”விலைமாதர்களிடம் போவதற்கு தண்டனையாக நம்முடைய பழம் நூல்கள் என்ன சொல்கின்றன தெரியுமா? நரகத்தில் குறுகிய காதுடைய (ஓட்டை) ஒரு ஊசி ஒன்று இருக்கிறது. அந்த ஓட்டை வழியாக திணித்து நசுக்கப் படுவீர்கள். பார்த்து நடந்து கொள்ளுங்கள்”. சொற்பொழிவு முடிகிறது.  ஒரு வீட்டின் கதவைத் தட்டுகிறார் சொற்பொழிவாளர். சொற்பொழிவாளரின் ஆசை நாயகியின் வீடு. “ஸ்வாமி, சற்று நேரத்திற்கு முன் தான் ஊசி தண்டனையைப் பற்றி கூறினீர்கள். மனைவியை விட்டு விட்டு என்னிடம் வரும் உங்களுக்கும் அந்த கொடிய தண்டனை கிடைக்குமல்லவா. தங்களுக்கு பயமில்லையா?” என்று கேட்கிறாள் ஆசைநாயகி. அதற்கு உபன்யாசகர்  “போடி பைத்தியமே, நான் போறதுக்குள்ள, இந்த ஊர்ல இருக்கறவன்லாம் நுழஞ்சு ஊசியோட ஓட்டை பெருசாயிடும். ஒட்டைக்குள்ள சுலபமாக போயிட்டு வந்திருவேன், நீ வாடி என் ஆசைக் கிளியே” என்று தன் ஆசை நாயகியை கட்டித் தழுவினார்.

Categories: people · tamil · தமிழ்
Tagged: ,

இலந்தை வடையும் உலகமயமாக்கலும்

September 1, 2008 · Leave a Comment

மாங்காயைக் கண்ட மசக்கைக்காரி போல், அந்த சிகப்பு நிற பாட்டிலைத் தாவி எடுத்து என் கூடையில் போட்டுக்கொண்டேன். காரணம், பாட்டிலின் மேல் ஆங்கிலத்தில் எழுதியிருந்த எழுத்துக்கள் - ”மாங்காயிஞ்சு ஊறுகாய்”.  இரவு உணவின் போது, தயிர் சாதத்திற்கு தொட்டுக் கொள்ள, பெரிய கரண்டி ஒன்றினால் எடுத்துப் போட்டுக்கொண்டு, ஆள்காட்டி விரலினால் வழித்து எடுத்து வாயில் வைத்தேன். பெரும் ஏமாற்றம். பாட்டிலை எடுத்து கவனமாகப் படித்தேன். ”மாங்காய் இஞ்சு” என்று எழுதியிருந்தது.  பாட்டிலின் மேல் ஒட்டியிருந்த வண்ணப் படத்தில் மாங்காயும் இஞ்சியில் என்னைப் பார்த்து தனித் தனியாக கேலி செய்தன.

பத்து வருட அமெரிக்க வாழ்வில் மறந்து விட்ட சுவைகள் பல.  இந்தியப் பயணத்தில் போது சிலவற்றை சுவைக்க வாய்ப்புகள் கிடைக்கின்றது.  சிலவற்றை உணவு வகைகள் சுவைக்கக் கிடைப்பது கடினம்.  எழுதி வைத்து விட்டு மறந்துவிட வேண்டியதுதான்.  இதோ நான் எழுதி வைக்க விரும்புவைகளில் சில:

இலந்தை வடை:  பாட்டிக்கு மாத்திரம் எப்படிக் கிடைத்ததோ அவை தெரியவில்லை. புழுக்கள் இல்லாத, செக்கச் செவேலென்ற அழகிய சிறு இலந்தைப் பழங்கள். அவற்றைக் கொண்டு பாட்டி செய்த இலந்தை வடை மிகவும் சுவையானவை. கடையில் சரம் சரமாக தொங்க விடப் பட்டிருந்த இலந்தை வடைக்கும் பாட்டியின் இலந்தை வடைக்கும் உள்ள ஒரு மிகப் பெரும் வித்தியாசம், அதன் நிறம். கடை வடை கறுப்பாக இருக்கும், பாட்டியின் வடை சிகப்பாக இருக்கும். அச்சிறுவயதில் திண்பதில் தான் ஆர்வம், செய்முறையில் இல்லை. பாட்டி உரலில் இலந்தை பழங்களை இடிக்கும் காட்சி லேசாக நினைவுக்கு வருகிறது. இலந்தையின் புளிப்பும், சிகப்பு மிளகாயின் காரமும் சேர்ந்த புளி+காரச் சுவை இன்றளவும் நாக்கில் ஊறுகிறது. 

சில வருடங்களுக்கு முன் இந்தியா சென்றிருந்த போது எனக்கு இலந்தை வடை கொண்டு வர முடியாததற்கு பாட்டி மிக வருத்தப்பட்டார். காரணம் உரலில் இடிப்பதற்கு அவர் கையில் வலு இல்லை, உரல் இருந்த வீடும் அவரிடம் இல்லை. அம்மா கடையிலிருந்து கருப்பு இலந்தை வடையை வாங்கிக்கொடுத்தார். அவற்றில் புளிப்பு இருந்தது காரம் இல்லை. இம்முறை ஊருக்குச் சென்றால் இலந்தை வடைக்காக வருத்தப்பட பாட்டி இல்லை.

கொடுக்காய்ப்புளி: சிறு வயதில், எங்கள் வீட்டில் இருந்ததை விட தெருவிலும், மற்றவர்கள் வீட்டிலும் வாழ்ந்த நாட்களே அதிகம். எங்கள் வீட்டு எதிர் வீட்டில் ஒரு கொடுக்காய்ப்புளி மரம். அந்த வீட்டிற்கு நான் எப்போது வேண்டுமானாலும் போகலாம், எது வேண்டுமானாலும் செய்யலாம். மாடியிலிருந்து கைக்கெட்டும் தூரத்தில் கொடுக்காய்ப்புளி மரக்கிளைகள். எட்டாத கிளைகளை உலுக்க தொரட்டிக் கம்பு. எப்போதும் கொடுக்காய்ப்புளி வேட்டை. சில வருடங்களில் அந்த வீடு கைமாறியது. புதிதாக வந்த மனிதர்கள் மாறவில்லை. என் கொடுக்காய்வேட்டை தொடர்ந்தது. அப்பாவின் வேலை நிமித்தமாக மதுரையும் கொடுக்காயையும் விட்டு வேறு ஊருக்கு செல்ல வேண்டியதாயிற்று. நான் வேட்டையாண்ட அந்த கொடுக்காய் மரம் இன்னும் இருக்கிறதா, அல்லது செங்கல்லுக்கும் சிமெண்டிற்கும் வழிவிட்டு போய்ச்சேர்ந்து விட்டதா என்று தெரியவில்லை?

மாங்காய் இஞ்சு: ஒரே செடியில் (வேரில்?) எனக்குப் பிடித்த இரண்டு சுவைகள். இது ஊறுகாய்களின் ‘நிலைய வித்வான்’. சிறு வயதில் வீட்டிற்கு யாராவது திடீர் விருந்தாளியை அப்பா கூட்டிக்கொண்டு வந்து, “என்ன இரவுச் சாப்பாட்டிற்கு ஏதாவது இருக்கிறதா” என்று கேட்டால். “மத்தியானம் வச்ச சாம்பார் கொஞ்சம் மிச்சம் இருக்கு, நிலையவித்வான் வச்சுட்டா போச்சு” என்பார். டீ.வி வருவதற்கு முன், எல்லோர் வீட்டிலும் வானொலி ஆட்சி புரிந்து கொண்டிருந்தது.  பெரிய கலைஞர்களின் கச்சேரி இல்லையென்றாலோ, சிறு நேர இடைவெளிகளை நிரப்ப வேண்டுமென்றாலோ “வாத்ய விருந்தா – நிலைய வித்வான்கள் வாசிக்கிறார்கள்” என்று ஆரம்பித்து ஏதாவது இசையை போட்டு சமாளித்து விடுவார்கள். வீட்டில் ஊறுகாய் ஏதும் இல்லை என்றால், மாங்காயிஞ்சிதான் நிலைய வித்வான். செய்வது மிகச் சுலபம் (மாங்காயிஞ்சு + பச்சை மிளகாய் + எலுமிச்சை + உப்பு), ஆனாலும் எவ்வளவு சுவை. சென்னை, பெங்களூர் போன்ற நகரங்களில் மாங்காயிஞ்சு கிடைக்கிறதா என்று தெரியவில்லை. அடுத்த தடவை முயற்சிக்க வேண்டும்.

விடுமுறையில் மிகவும் குறைந்த நாட்களுக்கே இந்தியா செல்வதால் சென்னை, பெங்களூர் போன்ற நகரங்களோடு எங்களது பயணம் முடிந்து விடுகிறது. அங்கே, விதவிதமான பீட்சாக்களையும், பாஸ்தாக்களையும், டாகோசையும், பரீட்டோக்களையும் பார்க்க முடிகிறது. நான் சிறு வயதில் விரும்பிச் சாப்பிட்ட இலந்தை வடையையும், கொடுக்காயையும், நுங்கையும் பார்க்க முடியவில்லை. திருச்சி, மதுரை போன்ற நகரங்களில் அவை கிடைக்கின்றனவா என்று தெரியவில்லை.

என் தேடுதல் சரியில்லையா, அல்லது அமெரிக்காவில் என் வீட்டுப் பக்கத்தில் உள்ள இந்தியப் பலசரக்குக் கடையில் மாவடு ஊறுகாய் கிடைக்கச் செய்யும், சென்னையில் வெஜிடபில் பிரமவேரா கிடைக்கச் செய்யும் உலகமயமாக்கல்  இலந்தை வடையையும் அவை இருந்த பெட்டிக் கடையையும் சாப்பிட்டுவிட்டதா?

(*)———————————-(*)——————————–(*)

பின் குறிப்பு:

வலையில் தேடியதில் கிடைத்த சில சுட்டிகள்:

 இலந்தை (Zizyphus Mauritiana) பற்றிய ஒரு மருத்துவ ஆராய்ச்சிக் கட்டுரை.

மாங்காயிஞ்சு (Curcuma amada) பற்றிய ஒரு ஆராய்ச்சிக் குறிப்பு.

ஹவாயில் கிடைக்கும் கொடுக்காய்ப்புளி (Pithecolobium dulce)

மாங்காயிஞ்சு ஊறுகாய் போடும் முறை.

Categories: Uncategorized