‘பெயர் ராசி’யில் எனக்க்கு நம்பிக்கை இல்லை. ஆனால் இராமானுஜம் என்ற மூன்று பெரியவர்களைப் பற்றி படிக்கும் போது ‘பெயர் ராசி’ என்று ஒன்று இருக்குமோ என்று சந்தேகப் படத் தோன்றுகிறது. இதோ என்னைக் கவர்ந்த மூன்று இராமானுஜர்கள்.
மூதலாமவர், 11-12ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த வைணவப் பெரியவர். தமிழ் வளர்த்தவர். புரட்சியாளராக அறியப்பட்டவர். இவர் வாழ்க்கைக் குறிப்பில் எனக்கு பிடித்த ஒன்று – பல தடவை அலைக்கழிக்கப் பட்ட பின், திருக்கோஷ்டியூர் நம்பி என்பவரிடம், மந்திர உபதேசம் பெறுகிறார் இராமானுஜர். நம்பி, “இந்த மந்திரம் பரம ரகசியம். அதிக பலன் வாய்ந்தது. மற்றவர்களுக்கு உபதேசம் செய்வதென்றால், மிகவும் ஜாக்கிரதையாக, குல கோத்திரம் அறிந்து உபதேசம் செய்” என்கிறார். இராமனுஜரோ, “இது அவ்வளவு சக்தி வாய்ந்த மந்திரம் என்றால், இதனால் எல்லோரும் பலன் அடைய வேண்டும், ஒரு சாராருக்கு மட்டும் போய்ச் சேரக் கூடாது” என்று எண்ணுகிறார். உடனே (திருக்கோஷ்டியூர்) கோவிலின் கோபுரத்தின் மேல் ஏறி, ஊரைக் கூட்டி எல்லோருக்கும் அந்த மந்திரத்தை அளிக்கிறார். இவரைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள வேண்டும்.
இரண்டாமவர், கணித மேதை ஸ்ரீநிவாஸ ராமனுஜன். 20ஆம் நூற்றாண்டு ஆரம்பத்தில் வாழ்ந்தவர். முப்பத்து மூன்று வயதிற்குள் பல கணிதக் கோட்பாடுகளுக்கு பங்களித்தவர். அவர் அப்போது எழுதி வைத்து விட்டுப் போன நோட்டுப் புத்தகங்களை வைத்துக் கொண்டு பல கணித வல்லுனர்கள் இப்போதும் மண்டையை உடைத்துக் கொண்டிருக்கிறார்கள். ராபர்ட் கனிகல் (Robert Kanigel) என்பவர் ராமனுஜத்தின் வாழ்க்கையைப் பற்றி மிக அருமையான புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார். கண்டிப்பாக படிக்க வேண்டிய வாழ்க்கை வரலாற்று புத்தகங்களில் ஒன்று.
மூன்றாமர், பேராசியர் A.K.ராமானுஜம் (1929-1993). சிகாகோ பழ்கலைக் கழகத்தில் மொழியியலாளராக பணியாற்றியவர். பல சங்க இலக்கிய பாடல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர். நம்மாழ்வார் பாசுரங்களை “Hymns for the drowning” என்று மொழிபெயர்திருக்கிறார். நாட்டுப்புற கலைகளிலும் கதைகளிலும் அதிக ஆர்வம் காட்டியிருக்கிறார். கர்னாடக மாநிலத்து நாட்டுப்புற கதைகள் சிலவற்றை தொகுத்து ”A Flowering Tree and Other Oral Tales from India” என்று புத்தகமாக வெளியிட்டுள்ளார். சுவையான சிறுகதைகள் அடங்கிய தொகுதி. எனக்குப் பிடித்த சிறுகதைகளில் ஒன்று:
கிராமத்துக் கோவிலில் உபன்யாசகர் சொற்பொழிவாற்றிக் கொண்டிருக்கிறார் ”விலைமாதர்களிடம் போவதற்கு தண்டனையாக நம்முடைய பழம் நூல்கள் என்ன சொல்கின்றன தெரியுமா? நரகத்தில் குறுகிய காதுடைய (ஓட்டை) ஒரு ஊசி ஒன்று இருக்கிறது. அந்த ஓட்டை வழியாக திணித்து நசுக்கப் படுவீர்கள். பார்த்து நடந்து கொள்ளுங்கள்”. சொற்பொழிவு முடிகிறது. ஒரு வீட்டின் கதவைத் தட்டுகிறார் சொற்பொழிவாளர். சொற்பொழிவாளரின் ஆசை நாயகியின் வீடு. “ஸ்வாமி, சற்று நேரத்திற்கு முன் தான் ஊசி தண்டனையைப் பற்றி கூறினீர்கள். மனைவியை விட்டு விட்டு என்னிடம் வரும் உங்களுக்கும் அந்த கொடிய தண்டனை கிடைக்குமல்லவா. தங்களுக்கு பயமில்லையா?” என்று கேட்கிறாள் ஆசைநாயகி. அதற்கு உபன்யாசகர் “போடி பைத்தியமே, நான் போறதுக்குள்ள, இந்த ஊர்ல இருக்கறவன்லாம் நுழஞ்சு ஊசியோட ஓட்டை பெருசாயிடும். ஒட்டைக்குள்ள சுலபமாக போயிட்டு வந்திருவேன், நீ வாடி என் ஆசைக் கிளியே” என்று தன் ஆசை நாயகியை கட்டித் தழுவினார்.
0 responses so far ↓
There are no comments yet...Kick things off by filling out the form below.