இலையுதிர் காலம் அந்த வீட்டு வாசலில் வண்ணக் கோலம் போட்டிருந்தது. சுற்றியிருந்த பல மாடி கட்டடங்களின் மத்தியில், இந்த வீடு வித்தியாசமாக காட்சியளித்தது. காரை சற்று தூரத்தில் நிறுத்திவிட்டு, மேட்டிலிருந்த வீட்டை நோக்கி மெதுவாக நடந்தேன். கீழே உயிர் விட்டிருந்த இலைகளை பார்க்க பரிதாபமாக இருந்தது.
”டக் டக்….”
”யெஸ் கம் இன்”
உள்ளே மூன்று பாட்டிகள் உட்கார்ந்திருந்தார்கள்.
”ஸாண்ட்ரா”
“இதோ இவர்தான்” என்று குள்ளப் பாட்டி ஆஜானுபாகுவான பாட்டியைக் காட்டினாள்.
“ஓ நீங்கள் தான் சற்று முன் போன் செய்திருந்தீர்களா” வயதும் சிகரெட்டும் போட்டி போட்டுக் கொண்டு தேய்த்திருந்த கரகரப்பான குரலில் கேட்டாள் ஆஜானுபாட்டி. ஆறடி உயரம். தாட்டியான உடம்பு. உயரத்தால் ஏற்பட்ட சிறு கூன். கறுப்பு ப்ரேமிட்ட தடிமனான மூக்குக் கண்ணாடி.
“ஆம்…இன்னிக்கு வீட்டிலிருந்து வேலை பார்க்கிறேன், அதனாலதான் நேர்லயே வரலான்னுட்டு…”
“வீட்டிலிருந்து வேலையா !!!”
”ஆமாம்…என் கம்ப்யூட்டர்ல தேவையான சாப்ட்வேர் இருக்கு…குறிப்பா வி.பி.என் அப்படின்னு ஒரு சாப்ட்வேர் இருக்கு அத வச்சி என்னோட ஆபிஸ் கம்ப்யூட்டர்ல இருக்கற ப்ரோக்ராமெல்லாம் ரன் பண்ணலாம்.
“ஹூம்…ஏதோ சொல்ற. ஒண்ணும் புரியல. ஆனா ஒண்ணு ‘வீட்டிலேர்ந்து வேல’ பாத்தா இந்த மாதிரி சில்லர வேலையெல்லாம் முடிச்சிடலாம்” என்று நமுட்டாக சிரித்தாள்.
”ஆமா எனக்கு கேசும்(gas) மிச்சம்…நாடு இருக்கற நிலமைல இதுதான் போனஸ்” நானும் பதிலுக்கு சிரித்தேன்.
சிறிய மெளனம்.
“இந்த பாங்குகளோட ஒரே தொல்ல….நேத்து இருந்த பாங்க் இன்னக்கி இல்ல…பேரு வேற அடிக்கடி மாறுது. இதுல, இன்ஷுயுரன்ஸ் பாலிசில ஒழுங்கா அட்ரஸ் இல்லன்னா, ஃபைன் போடறாங்க. ஒங்க பாங்கிலிருந்து வந்த லெட்டர காட்டுங்க, பாலிசில கரெக்ட் அட்ரஸ் மாத்திடறேன்”
பேப்பரை நீட்டினேன்.
பேப்பரை எடுத்துக் கொண்டு அடுத்த அறைக்கு சென்றாள் பாட்டி.
பாட்டி உட்கார்ந்திருந்த இடத்திற்கு பின்னால் மாட்டியிருந்த கறுப்பு-வெள்ளை புகைப்படம் தெளிவாக தெரிந்தது.
முதுகிற்கு பின்னால் சிகரெட் வாடை அடித்தது. நான் பார்ப்பதை பாட்டியும் பார்த்துக்கொண்டிருந்தாள்.
“படத்தில் இருக்கும் இந்த அழகான பெண் யார்?” என்று விடை தெரிந்து கொண்டே கேட்டேன்.
“நாந்தான்…1968ல எடுத்தது இது. இதோ இங்க என் பக்கத்துல ஒருத்தர் நின்னுகிட்டுருக்காரே அவர்தான் இப்ப இருக்கற முதலாளியோட அப்பா…அதோ அங்க ஒக்காந்துகிட்டிருக்காரே அவர் முதலாளியோட தாத்தா. போன மாசம் என்னோட பிறந்த நாள் அன்னிக்கு எனக்கு தெரியாம ஸர்ப்ரைசாக இந்த படத்த மாட்டிட்டாங்க”. பாட்டியின் கண்களில் புன்னகை.
0 responses so far ↓
There are no comments yet...Kick things off by filling out the form below.